செக்கச் சிவந்தவள் நான் செவ்விதழின் தோரணம் நான்
மிக்கக் குளிர்ந்தவள் நான் மேன்மையதின் மேன்மை நான்
ஒற்றை காலவள் நான் ஒய்யார ஆடகி நான்
குற்றை கொடியவள் நீயெனக்கு நேர்நிகர் தானோ?
சின்னஞ் சிறியவள் நான் சிங்காரச் சிரிப்பவள் நான்
வெண்மை கொண்டவள் நான் வெண்ணிலவின் தோழியும் நான்
பின்னித் தலையில் கொண்டெ திரெதிரே நடைபோட்டால்
உன்னினும் மணப்பவள் நான் உனக்குகீழ் குறைந்தேனோ?
தொன்மையான இவ்வுலகினிலே பல
மென்மை சேர்த்திட மாட்டாமல் கருந்
தன்மை உடைய கனலாக உயர்
வன்மை செய்திடல் சரிதானோ !
காட்டுத்தீ போல் பரவிவரும் கொடும்
வேட்டை களங்கள் புகுத்தி வரும்
நாட்டை பொசுக்கும் நாசினியை இனி
வெட்டி எரியும் நாளேதோ !
ஏற்றம் உழுது வாழ்ந்து வந்தோம் உயர்
காற்றை மிதமாய் தாங்கி வந்தோம் பல
பயிர்கள் வளர்ந்த பூமியின் மேலே
உயிர்கள் பறிக்க கிளம்பிவிட்டோம் !
தேவை இதுவல்ல அறிவீரோ உயிர்
சேவை பெரிதென உணர்வீரோ இனி
ஆயுதம் ஏந்திய கையை உதரி
தோழமை சேர்த்திட மாட்டீரோ !
அரனும் நானும் ஒன்றே காண்க
அடைந்தவை கைபிடி மண்ணே காண்க
ஆதவன் உடுத்திய ஆடை காண்க
ஆணவம் தனக்கு உவமை காண்க
பாலினும் தூய்மை என்னில் காண்க
பாதை தெரிய ஒளியைக் காண்க
சீதை கற்பின் ஆயுதம் காண்க
சீற்றம் கொண்டால் அழிவைக் காண்க
உடம்பை இயக்கும் உயிரைக் காண்க
அதனைப் பொசுக்கும் எரியைக் காண்க
பூதம் ஐந்தில் ஒன்றைக் காண்க
புவியின் நடுவில் கொதிப்பவைக் காண்க
நீரைக் கொல்லும் என்னைக் காண்க
என்னைக் கொல்லும் நீரைக் காண்க
அடக்கி வைத்தால் உயர்வைக் காண்க
அழிக்க எடுத்தால் வீழ்ச்சி காண்க