செம்மொழி

on Saturday, November 1, 2008

உச்சரிப்போர் நாவினிலே கச்சேரி நடனமிடும்
உச்சிப்புகழ் பெற்றுவிட்ட தீம்மொழியே - நிந்தன்
கட்சிப்புகழ் ஓங்கிவிட்ட சாட்சிசொல்லி பாட்டெழுத
இலட்சியத்தை பெற்றேனடி செம்மொழியே

பட்டினத்தார் பாட்டினிலும் கட்டிவைத்த ஏட்டினிலும்
கொட்டி முழக்கமிடும் பைம்மொழியே - உன்னை
கட்டிவைத்து பெட்டிதனிலே பூட்டிவைக்க எண்ணினோர்கை
வெட்டி எரிந்தாரடி தமிழ்மொழியே

கவிநூறு கோலங்கள் புவிதோறும் அறிஞர்கள்
பவித்திர சிறப்படைந்த எம்மொழியே - எந்தன்
செவிப்பாய்ச்சும் தேனமுதம் சுவைக்கண்டு மெய்மறந்து
துயில்நீங்கி கற்றேனடி கனிமொழியே

ஆயிரம் அறிஞர்கள் அரசர்கள் அரசவையில்
பாயிரம் பாடினர் பழந்தமிழே - பகலோன்
வாழும்வரை வாழ்ந்திடுவாய் வான்புகழும் வளமையினை
தாழாது தரித்திடும் தமிழமுதே

பண்டுமொழி பலவற்றைக் கண்ட திருநாட்டினிலே
கொண்டபெயர் மங்காத திருமொழியே - மலரின்
செண்டுமீது வட்டமிடும் வண்டுகளின் கூட்டமென
உண்டுபல ஆர்வலர்கள் தேன்மொழியே

புத்தகங்கள் அடுக்கிவைத்து யுத்தங்கள் நிறுத்திவைத்து
நித்தம் நின்னை ஓதுகின்ற வரம்பெறினே - உலகம்
கத்தியின்றி இரத்தமின்றி சத்தியத்தின் மார்கத்திலே
தத்தித்தி தவழுமடி என்னுயிரே

கனிமூன்று சுவைதனினும் நனிஇன்பம் நல்குகின்ற
பனிக்குன்று வரைநீளும் அருமொழியே - எந்தன்
உமிழ்வற்ற பாடிடுவேன் அமிழ்தினும் இனிமைமிகு
தமிழ்மொழி உனக்குஎன் வந்தனமே

----- தீன தயாளன்

2 comments:

Dharani said...

தமிழின் இனிமையை இனிதே எடுத்து உரைக்கும் கவி

PICASSA said...

//உன்னை
கட்டிவைத்து பெட்டிதனிலே பூட்டிவைக்க எண்ணினோர்கை
வெட்டி எரிந்தாரடி தமிழ்மொழியே //

தமிழ் மொழியின் பெருமையை அருமையாய் .. ஆணித்தனமாய் கூறிய கவியே நீ வாழ்க.. :)